அப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அரசு, அங்குள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. புதிய உத்தரவின்படி, எந்தவொரு அரசு ஊழியரோ அல்லது அதிகாரியோ ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தினால், அந்த மொபைல் போன் உடனடியாக அந்த இடத்திலேயே உடைத்து நொறுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தலிபானின் ராணுவ நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த கடுமையான சட்டத்தை மீறுபவர்கள் மீது ஷரியா சட்டத்தின்படி கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தலிபான் தரப்பு அறிவித்துள்ளது.

இது குறிப்பாக, அங்கு சமீபகாலமாக தலிபான் அரசுக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டங்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உலகளவில் கவனம் பெற்றதைத் தொடர்ந்தே இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் இந்த ஸ்மார்ட்போன் தடை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படவில்லை என்றாலும், சில மாகாணங்களில் அரசு ஊழியர்களைத் தாண்டி பெண்கள், ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் வரை இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில் இந்த விதியிலிருந்து விலக்கு பெற விரும்பும் உயர் அதிகாரிகள், தலிபானின் உச்ச தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாதாவிடம் முறையான எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.