
சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்க்கும் ஒருவருக்கு [email protected] என்ற போலியான மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் நம்ப தகுந்த வகையில் தாங்கள் வணிகம் செய்து வரும் கம்பெனி கோரிய பொருட்களுக்கான அடக்க விலை பட்டியல் உடன் செலுத்த வேண்டிய பணம் USD 238,500 (இந்திய மதிப்பில் சுமார் 2,00, 10, 150 ரூபாய்) பணத்தை அமெரிக்காவில் இருக்கும் Regions Bank கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மின்னஞ்சல் சம்பந்தப்பட்ட கம்பெனியில் முன்னதாக புறப்பட்ட மின்னஞ்சல்களுடன் தொடர்புடையதாக இருந்தது.
இதனால் வணிக மேலாளர் இரண்டு வங்கிகளில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி பணத்தை அனுப்பியுள்ளார். அதன்பிறகு 27-ஆம் தேதி என்று பணம் கிடைத்து விட்டதா என அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது மோசடி அரங்கேறியது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதனால் சென்னையில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா லெதர் இன்டர்நேஷனல் கிளைக்கு கடிதம் அனுப்பி அந்த பணம் அமெரிக்காவில் இருக்கும் வங்கியில் வரவு வைக்கப்பட்டிருப்பத்தை அறிந்தனர்.
உடனடியாக சைபர் க்ரைம் தனிப்படை குழு, உள்துறை அமைச்சகம், மற்றும் அமெரிக்க பேங்க் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீவிர முயற்சி அடிப்படையில் மோசடி செய்யப்பட்ட அந்த பணத்தை மோசடியாளர்கள் எடுக்க முடியாதபடி வங்கி கணக்கில் நிறுத்தி வைத்தனர். அந்த பணம் விரைவில் புகார் தாரர்களுக்கு கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் தொடர்பான மோசடி நடந்தால் 1930 என்ற எண்ணில் புகார் கொடுக்க வேண்டும் என மாநில சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.