மகாராஷ்டிரா மாநிலம் விரார் வெஸ்ட் பகுதியில் உள்ள 18வது மாடி கட்டடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு 9:30 மணியளவில் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் நலசோபாரா அச்சோலில் உள்ள ராகுல் இன்டர்நேஷனல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த ஷான் கோராய் (20) மற்றும் ஆதித்யா ராம்சிங் (21) என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இது விபத்து என வழக்கு பதிவு செய்த போலீசார், பின்னர் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆதித்யாவின் தந்தை கூறியதாவது, “ஒரு பெண் தொடர்பாக சில இளைஞர்களுடன் ஏற்பட்ட தகராறு மறுபடியும் வெடித்தது, மேலும் அந்த இருவருடன் மூன்றாவது நபர் இருந்ததாகக் கூறப்பட்டதால் இது விபத்தல்ல, கொலை என சந்தேகம் எழுகிறது” என்றார்.
போலீசாரின் ஆரம்ப விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் மேற்பார்வையில் இல்லையென நம்பிய குடும்பத்தினர், உடல்களை ஜே.ஜே மருத்துவமனைக்கு மாற்றி இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
“எங்கள் பிள்ளைகள் போதைப்பொருள் மற்றும் தவறான பழக்கங்களில் ஈடுபட்டவர்கள் அல்ல” என்றும், “போலீசார் உண்மையை மறைக்க முயற்சி செய்கிறார்கள்” என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது அர்னாலா கோஸ்டல் போலீசாரின் தலைமையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
