கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் என்.ஜி.ஆர் தொழிலாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அமைந்துள்ளது. இங்கு செயலாளராக கோதண்டராமன் என்பவரும், தலைவராக ராஜேந்திரன் என்பவரும் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் இணைந்து கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்களின் பெயரில் போலியாக அடமான கடன் வாங்கியும், உறுப்பினர்களின் நிரந்தர வைப்புத் தொகையிலிருந்து அவர்களுக்கு தெரியாமலேயே கடன் தொகை பெற்றும் பண மோசடி செய்துள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகளின் தணிக்கையில் 2 கோடியே 11 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அர்த்தநாரிஸ்வரன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நேற்று கோதண்டராமனை அதிரடியாக கைது செய்தனர். மேலும் கூட்டுறவு சங்க செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்தது குறிப்பிடத்தக்கதாகும்.