சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ‘டி20 மும்பை லீக்’ தொடருக்கான ஏலத்தில் ‘ஏஆர்சிஎஸ் அந்தேரி’ அணியால் 10 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெறும் 2 லட்சம் ரூபாய் அடிப்படை விலையுடன் ஏலத்தில் களமிறங்கிய அவருக்கு, பல்வேறு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக அவரது விலை கிடுகிடுவென உயர்ந்தது.
மேலும் இறுதியில், அடிப்படை விலையை விட 400 சதவீதம் அதிக விலைக்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் அர்ஜுன் டெண்டுல்கர், இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு பெறாத நிலையில் இந்த மும்பை லீக் ஒப்பந்தம் அவருக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்த அணியில் அவர் இந்திய நட்சத்திர வீரர் சிவம் துபே மற்றும் இளம் வீரர் முஷீர் கான் ஆகியோருடன் இணைந்து விளையாட உள்ளார். ஜூன் மாதம் தொடங்கவுள்ள இந்த டி20 தொடர், அர்ஜுன் தனது திறமையை நிரூபிக்க ஒரு சிறந்த களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
