ஐபிஎல் 2026 பயிற்சி ஆட்டத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவிடம் இருந்து வெளிப்பட்ட மனிதாபிமானச் செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாத ரோகித், வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, அவர் அடித்த பந்து எதிர்பாராதவிதமாக மைதான ஊழியர் சிபன் பிஸ்வாஸ் என்பவரின் இடது முழங்காலில் பலமாகத் தாக்கியது.
மேலும் அடிபட்டவுடன் வலியால் துடித்த அந்த ஊழியரிடம், ரோகித் உடனடியாக ஓடிச் சென்று நலம் விசாரித்தார். அந்த ஊழியர் பரவாயில்லை என்று கூறி ரோகித்தை தொடர்ந்து விளையாடச் சொன்ன போதிலும், அவரது வலியைக் கண்டு பதற்றமடைந்த ரோகித், பயிற்சியை அப்படியே நிறுத்திவிட்டு அவருக்கு உதவ முன்வந்தார்.
ரோகித் சர்மா காட்டிய அந்த அக்கறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அடிபட்ட ஊழியருக்குத் தேவையான ஐஸ் பேக் மற்றும் முதலுதவி மருந்துகளைத் தானே நேரில் கொண்டு வந்து கொடுத்ததுடன், ஒரு மருத்துவக் குழுவையும் அனுப்பி வைத்தார். வலியால் அவதிப்பட்டாலும், இந்திய அணியின் கேப்டன் நேரில் வந்து கை கொடுத்து நலம் விசாரித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக சிபன் பிஸ்வாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் களத்தில் ஆக்ரோஷமாகச் செயல்பட்டாலும், நிஜ வாழ்க்கையில் ரோகித் சர்மா ஒரு “ஜென்டில்மேன்” என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
