கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சுற்றுலாத் தலமான விதுராவில், மாயமான காதலர்கள் இருவர் விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம், விதுரா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் அறை எடுத்துத் தங்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்துப் பார்த்தபோது, இருவரும் அறையினுள் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள்சுபின் (28) மற்றும்  மஞ்சு (31) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். மஞ்சு மற்றும் சுபின் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே வெவ்வேறு நபர்களுடன் திருமணம் முடிந்துவிட்டது. இருப்பினும், திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தங்களது தொடர்பைத் தொடர்ந்து வந்துள்ளனர். அவ்வப்போது தனிமையில் சந்தித்துப் பேசி வந்த இவர்களது விவகாரம், சமீபத்தில் இருவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது.

தங்களது உறவுக்குக் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சில நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து அவர்களது குடும்பத்தினர் தனித்தனியாக காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் போலீசார் இவர்களைத் தேடி வந்த நிலையில், விதுராவில் உள்ள விடுதியில் இவர்கள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தங்களது காதல் விவகாரம் வெளியில் தெரிந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருவரும் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.