தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் கேவிஎன் நிறுவனம் படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் இன்று வெளியாவதாக இருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் ஒத்திவைக்கப்பட்டது. அதாவது மத நல்லிணக்கத்தை புண்படுத்தும் விதத்தில் காட்சிகள் படத்தில் இருப்பதாக கூறி மறு ஆய்வுக்கு சென்சார் போர்டு அனுப்பி உள்ளதாகவும் அதனால் சான்றிதழ் வழங்காததாகவும் கூறப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது. மேலும் அதன்படி படத்தை மறு ஆய்வு அனுப்பிய சென்சார் போர்டு உத்தரவை ரத்து செய்த நீதிபதி உடனடியாக ஜனநாயகன் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகார் ஆபத்தானது எனவும் அதனை ஊக்கப்படுத்த முடியாது எனவும் தனி நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்தார். அதே நேரத்தில் இது தொடர்பாக சென்சார் போர்டு உடனடியாக மேல்முறையீடு செய்ய இருக்கிறது. இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக பரிசீலிப்பது தொடர்பாக பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்
