ஒடிசா மாநிலம் காஷிபுர் கிராமத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாஷிபூர் வாரச் சந்தைக்கு இரண்டு ஆண்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு தனது சொந்த கிராமமான பேகுனியா கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது உறவினர்கள் அவர்களைப் பார்த்தனர். அப்போது, அந்த இரண்டு ஆண்களில் ஒருவருக்கும் அந்த பெண்ணிற்கும் கள்ளக்காதல் இருப்பதாகக் கூறி உறவினர்கள் தகராறு செய்தனர்.
இதையடுத்து, கிராம மக்கள் ஒன்று கூடி, அந்தப் பெண்ணையும், அவருடன் சென்ற இரண்டு ஆண்களையும் மின்கம்பத்தில் கட்டி வைத்து, கடுமையாகத் தாக்கினர். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, ஜாஷிபூர் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரையும் மீட்டனர். பின்னர், அவர்களை உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இஇந்த சம்பவம் குறித்த விசாரணையில், மோட்டார் சைக்கிளில் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற இரண்டு ஆண்களில் ஒருவர், அந்தப் பெண்ணின் மாமியாருக்கு மிகவும் நெருங்கிய நபராகவும், சகோதரன் போன்றவராகவும் இருந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால், அந்தப் பெண்ணின் தந்தை வழி மாமா உள்ளிட்ட சிலர் கள்ளக்காதல் இருப்பதாக குற்றம்சாட்டியதால் இந்த தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
