உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பல்வேறு இடங்களில் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி சிறுமியை போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பாபுராம் (21) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று, மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புனே உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. மேலும், 25 நாட்களுக்கும் மேலாக சிறுமியை கடத்தி வைத்திருந்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
போலீசார் தேடுவதை அறிந்த பின், பாபுராம் சிறுமியை மீண்டும் உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பாபுராம் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
