குஜராத் மாநிலம் மெஹன்சா பகுதியைச் சேர்ந்த கிஸ்மட்சின் சவ்தா என்பவர், தனது மனைவி ஹீனாபென் மற்றும் 2 வயது மகள் தேவன்ஷியுடன் குஜராத்தில் வசித்து வந்தார். சவ்தாவின் சகோதரர் ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருவதால், சட்டவிரோதமாக போர்ச்சுகலுக்கு சென்று அகதிகளாக வாழ முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்காக, சவ்தா தனது குடும்பத்துடன் விமானம் மூலம் துபாய்க்கு சென்று, அங்கிருந்து லிபியா வழியாக போர்ச்சுகலுக்குள் நுழைய திட்டமிட்டார். ஆனால், துபாயிலிருந்து லிபியா சென்ற அவர்களை மர்மகும்பல் ஒன்று கடத்திச் சென்றது. அவர்களை விடுவிக்க ரூ.2 கோடி பணம் வழங்க வேண்டும் என அந்தக் கும்பல், சவ்தாவின் சகோதரரிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, சவ்தாவின் சகோதரர் லிபியா அதிகாரிகளுக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் தொலைபேசி மூலம் புகார் அளித்தார். அதன் பேரில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விவகாரத்தை தீவிரமாக விசாரித்து, கடத்தப்பட்ட குடும்பத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி உட்பட நான்கு பேர் ஈரானில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுக்குப் பிறகு, அவர்கள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
