கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரன் (46), ஏலூர் நகராட்சியின் 27-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) வேட்பாளராக போட்டியிட்டார். சமீபத்தில் நடைபெற்ற நகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், அவர் 3-ம் இடத்தைப் பிடித்து தோல்வியடைந்தார்.

சுபாஷ் சந்திரன், 2006-ம் ஆண்டு நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது, குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்தார். அப்போது நண்பர்களின் துணிச்சலான முயற்சியால் அவர் மீட்கப்பட்டார். இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் எடுக்கப்பட்டு, அது பெரும் வரவேற்பையும் வணிக வெற்றியையும் பெற்றது. அந்த திரைப்படத்தில் இடம்பெறும் ‘சுபாஷ்’ என்ற கதாபாத்திரத்தின் நிஜ நாயகன் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டிருந்த போதிலும், நகராட்சி தேர்தலில் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் போனார்.