மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் பதற்றம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சுமார் 1,600 கோடி ரூபாய் (200 மில்லியன் டாலர்) மதிப்பிலான ‘MQ-4C Triton’ என்ற உலகின் மிக விலையுயர்ந்த உளவு டிரோன் திடீரென மாயமாகியுள்ளது.
பாரசீக வளைகுடா பகுதியில் 3 மணி நேர கண்காணிப்புப் பணியை முடித்துவிட்டு இத்தாலியில் உள்ள தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சுமார் 50,000 அடி உயரத்தில் பறந்த இந்த டிரோன், திடீரென 10,000 அடிக்குக் கீழே இறங்கி ரேடார் திரையில் இருந்து மறைந்தது.
இந்த டிரோன் மாயமாவதற்குச் சற்று முன் ஈரான் வான்பரப்பை நோக்கித் திரும்பியதாகக் கூறப்படுவதால், இதனை ஈரான் சுட்டு வீழ்த்தியிருக்குமோ என்ற சந்தேகம் அமெரிக்காவுக்கு எழுந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறா? அல்லது திட்டமிட்ட தாக்குதலா? என்று தெரியாமல் அமெரிக்க ராணுவம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. ஏற்கனவே லெபனான் தாக்குதல்களால் போர் நிறுத்தம் ஊசலாடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தச் சம்பவம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
