இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் லெபனான் நாட்டை நிலை குலையச் செய்துள்ளன. இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 1,953 பேர் உயிரிழந்துள்ளதோடு, 6,303-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் நாட்டைச் சேர்க்கப் போவதில்லை என இஸ்ரேல் பிடிவாதமாக அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, லெபனானின் பல முக்கிய பகுதிகள் சுடுகாடாக மாறி வருகின்றன. குறிப்பாக, ஏப்ரல் 8-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவில்லை. அந்தத் தேதிக்குப் பிறகு மட்டும் லெபனானில் 357 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வேதனையுடன் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் ஒருபுறம் பேசப்பட்டாலும், லெபனான் மீது இஸ்ரேல் காட்டும் தீவிரம் அந்தப் பிராந்தியத்தையே போர்க்களமாக மாற்றியுள்ளது.
