பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மக்களின் உரிமைகளுக்காகவும், அங்கு நடைபெறும் கட்டாயக் கடத்தல்கள் மற்றும் சட்டவிரோதக் கொலைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த முன்னனி மனித உரிமை ஆர்வலரான டாக்டர் மஹ்ரங் பலோச்சிற்கு (வயது 33) அங்குள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு குவாடர் பகுதியில் பலூச் ஒற்றுமைக் குழு  நடத்திய தீவிரப் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், மக்களை வன்முறைக்குத் தூண்டியதாகக் கூறி மஹ்ரங் பலோச் மற்றும் அவரது சக கூட்டாளியான சிப்கத்துல்லா ஆகியோருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மஹ்ரங் பலோச்சிற்கு, முறையான வெளிப்படையான விசாரணை இன்றி, ரகசியமான முறையில் சிறைக்குள்ளேயே நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டு இந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர்களும் குடும்பத்தினரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் ‘பலோசிஸ்தானின் பெண் சிங்கம்’ என்று மக்களால் அழைக்கப்படும் மஹ்ரங் பலோச், அடிப்படையில் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். கடந்த 2009 ஆம் ஆண்டு இவரது தந்தை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டு, பின்னர் 2011 இல் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு தனது 16 வயதிலேயே போராட்டக் களத்தில் குதித்த மஹ்ரங், பலூச் இன மக்களின் உரிமைப் போராட்டத்தின் முக்கிய முகமாக மாறினார். குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத் நோக்கி சுமார் 1,600 கிலோமீட்டர் தூரத்திற்கு இவர் தலைமை தாங்கி நடத்திய பிரம்மாண்ட நெடும் நடைப்பயணம் உலக நாடுகளின் கவனத்தை பலூசிஸ்தான் பக்கம் திருப்பியது. இவரது அமைதிப் போராட்டங்களை மதித்து, கடந்த 2024 இல் பிபிசி  மற்றும் டைம்  இதழ்கள் உலகின் மிகச் செல்வாக்குமிக்க 100 பெண் தலைவர்களில் ஒருவராக இவரைத் தேர்வு செய்தன. தற்போது இவருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த ஆயுள் தண்டனைக்கு ஐக்கிய நாடுகள் சபை  உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலகத் தலைவர்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.