தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவர், 16 வயது சிறுமியை பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின், அந்த சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில், சிகிச்சைக்காக அவரது பெற்றோர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததுடன், கர்ப்பமாக இருப்பதும் மருத்துவர்கள் கவனத்திற்கு வந்தது. இதுபற்றி சமூக நலத்துறையினர் விசாரித்ததுடன், பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (வயது 50) சிறுமியின் குடும்பத்தினரை அழைத்து விசாரித்த போது, குழந்தை திருமண தடுப்பு சட்டம் விதிகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தரும்படி கூறியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து, ரசாயன பவுடர் தடவிய பணத்தை வழங்குமாறு சிறுமியின் தாயாரை வழிநடத்தினர்.

திட்டமிட்டபடி, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லஞ்சம் வாங்கும் தருணத்தில், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் வீரம்மாளை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், போலீஸ் துறையின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.