சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டிற்குச் செல்லும் வழியில் ஒரு இளைஞர் “ஐ லவ் யூ” என்று கூறியதாகவும், இதற்குமுன் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் குரூட் காவல் நிலையத்தில் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில், போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால், முதன்மை நீதிமன்றம் அந்த இளைஞரை முன்பே விடுவித்து வைத்திருந்தது. மாநில அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் எஸ். அகர்வால், “ஐ லவ் யூ” என்று ஒருமுறை கூறுவதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பாலியல் சீண்டல் என்று கருத முடியாது என்றார். மேலும், தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், பாலியல் நோக்கத்துடன் நடந்ததாகவும் தெளிவான ஆதாரம் இல்லாவிட்டால், போக்சோ சட்டத்தின் பிரிவு 7க்கு உட்பட்ட குற்றமாக இது வகுக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதற்கு உறுதிப்படுத்தல் அளிக்கும் வகையில், உச்சநீதிமன்றம் 2021-ல் தீர்ப்பளித்த “அட்டர்னி ஜெனரல் ஃபார் இந்தியா vs சதீஷ்” வழக்கை நீதிபதி மேற்கோளாக காட்டினார். அந்த வழக்கில், பாலியல் சீண்டலுக்கான குற்றச்சாட்டு அமைய, சைகை அல்லது வார்த்தைகளுக்கு பின்னால் ஒரு பாலியல் நோக்கம் இருக்க வேண்டுமென்பதை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. எனவே, இச்சம்பவத்தில் அத்தகைய நோக்கம் எதுவும் தெளிவாக காணப்படவில்லை என்பதால், மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, இளைஞரின் விடுதலையை உறுதி செய்தது.