பீகாரின் தலைநகர் பாட்னாவில், மின்வாரியம் நடத்திய ‘மின்வெட்டு ஒத்திகை’யின் போது, மர்ம நபர்களால் தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவின் சுல்தான்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த மசாலா வியாபாரி, கடந்த மே 14 அன்று இரவு நகரின் விளக்குகள் 15 நிமிடங்களுக்கு அணைக்கப்பட்டிருந்த நேரத்தில் இந்தத் தாக்குதலுக்கு உள்ளானார்.

மேலும் ஒத்திகையின் காரணமாக நகர் முழுவதும் இருளில் மூழ்கியிருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட குற்றவாளிகள், தொழிலதிபரை மிக நெருக்கமான தூரத்தில் வைத்து சுட்டுவிட்டு, இருளைச் சாதகமாக்கிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒத்திகையின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இத்தகைய துணிகரமான குற்றத்திற்கு வழிவகுத்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தத் திட்டமிட்ட கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மின்வெட்டு ஒத்திகை என்ற பெயரில் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இந்தச் சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.