தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்குனரான பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையினரும், பொதுமக்களும் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் பாரதிராஜா உடல் வைக்கப்படும் என்றும், அதன் பிறகு இன்று இரவே அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

​தேனிக்கு கொண்டு செல்லப்படும் இயக்குனர் பாரதிராஜாவின் உடல், தேனி காட்ரோட்டில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை மாலை 3 மணிக்கு அவரது பண்ணை தோட்டத்திலேயே முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் இமயத்திற்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்க தமிழக அரசு ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஒட்டுமொத்த திரையுலகமே தேனியில் குவியத் தொடங்கியுள்ளது.