திருமணத்திற்கு புறம்பான உறவுகள் இன்று பல இடங்களில் சமூக விவாதங்களுக்கு இடமளிக்கின்றன. இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தின் ஜமீன் சந்தல் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் அணுகுமுறைக்கும், குழந்தைகளை கவனித்து வளர்ப்பதற்கான அவரது தீர்மானத்திற்கும் மக்கள் பலவிதமான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
கிராமத்தைச் சேர்ந்த அசோக் பிந்த், சில ஆண்டுகளுக்கு முன்பு ரேகா பிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு 5 வயது மகன் மற்றும் 3 வயது மகள் உள்ளனர். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவரும் அசோக், சமீபகாலமாக மனைவியின் நடத்தை குறித்து சந்தேகமடைந்தார். விசாரணையில், அவரது மனைவி அதே கிராமத்தைச் சேர்ந்த சாகர் பிந்த் என்ற நபருடன் நெருக்கமாக பேசிவந்தது தெரியவந்தது.
ஆகஸ்ட் 25 அன்று ரேகா, தனது இரு குழந்தைகளை விட்டுவிட்டு சாகருடன் இல்லத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அசோக் செப்டம்பர் 1-ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்தார். 15 நாட்களுக்கு பின்னர், காவல்துறையினர் ரேகாவை கண்டுபிடித்தனர். , அசோக் தனது மனைவியை நேரில் சந்தித்த போது, அவர் தெளிவாக – “நான் என் காதலனுடன் வாழ விரும்புகிறேன், உன்னுடன் இல்லை” என கூறினார். இந்த வார்த்தைகளை கேட்ட கணவர், கண்களில் கண்ணீருடன் மனைவியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார்.
மனைவியின் விருப்பத்தை மையமாகக் கொண்டு, அசோக் குடும்பத்தினருடன் ஆலோசித்து, தனது மனைவியை சாகருடன் கிராமத்திலுள்ள ஹனுமான் கோவிலில் திருமணம் செய்து வைத்தார். இது மட்டுமன்றி, மனைவி ரேகா எழுத்துப்பூர்வமாக “நான் என் கணவருடன் வாழ மாட்டேன். என் காதலருடன் வாழ விரும்புகிறேன். என் இரு குழந்தைகளும் தந்தையுடன் வாழட்டும். சாகருடன் நீதிமன்ற திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்று ஒப்புதல் கடிதம் அளித்தார். சாகரும் அதே போல தனது சம்மதத்தை பதிவு செய்தார்.
இந்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. சிலர், “அசோக் ஒரு பெரிய மனம் கொண்டவர், கட்டாயத் திருமண வாழ்க்கையை விட, மனைவியின் விருப்பத்தை மரியாதைப்படுத்தினார்” எனக் கூறுகிறார்கள். மற்றவர்கள், “குழந்தைகளுக்காக மனைவியை தக்க வைத்திருக்கலாம், குழந்தைகளின் எதிர்காலம் என்ன?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.
மேலும் சிலர், “இது சமூக ஒழுங்குக்கு எதிரானது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்ட நடவடிக்கை தேவை” எனக் கூறுகிறார்கள்.
