அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு அவர் முதல்வராக பதவியேற்றபோது, தனது முதலாவது சுதந்திர தின உரையில் “மாத்ரு-பித்ரு வந்தனா” (தாய்-தந்தை வழிபாடு) என்ற திட்டத்தை அறிவித்திருந்தார். தற்போது, அந்தத் திட்டம் நடைமுறைக்குவந்து, அரசுப் பணியாளர்களுக்கு புதிய வகையான சிறப்பு விடுமுறை வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பணியாளர்கள் தங்கள் பெற்றோர்களுடன் நேரத்தை கழிப்பதற்காக நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களில் தற்செயல் விடுப்பு (CL) பெற அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடுமுறையை பெற, தகுந்த வழிகாட்டலின் அடிப்படையில் முன்விருப்பம் தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு வெளியிட்ட உத்தரவினில், மாநில ஆளுநர் குலாப்சந்த் கடாரியாவும் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். இது குறித்து விரிவான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் “மாத்ரு-பித்ரு வந்தனா” திட்டத்தின் முக்கிய நோக்கம், அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களிடம் நேரம் செலவிடும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது. நகர வாழ்க்கையில் பெற்றோர்களிடம் நேரம் செலவிட முடியாமல் போகும் நிலையை மாற்றவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அசாம் மாநில அரசு, சமூகத் தழுவலையும், குடும்ப உறவுகளின் நெருக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் இது ஒரு முக்கியமான முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
