கடந்த 16 ஆண்டுகளாகப் பிரிந்து வாழும் தனது மனைவிக்கு மாதம் 15,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கி வரும் 54 வயது நபரின் விவாகரத்து மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்றைய விலைவாசியில் 15,000 ரூபாய் என்பது மிகக் குறைவான தொகை என்று அதிரடியாகத் தெரிவித்தது.

​மாதம் 65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அந்த நபர், 15,000 ரூபாய் தருவதே தனக்குப் பெரிய சுமை என்று வாதிட்டார். ஆனால், இதனை ஏற்காத நீதிபதிகள், “விவாகரத்து வேண்டுமென்றால் மொத்தமாகப் பெரிய தொகையை (Permanent Alimony) வழங்க முன்வர வேண்டும், இல்லையென்றால் பேசாமல் அமைதியாக மாதம் 15,000 ரூபாயைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருங்கள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டனர்.

​மனைவி தரப்பில் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்கப்பட்ட நிலையில், “மனைவியுடன் சேர்ந்து வாழ்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.