கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் ஆழியாறு அணையின் கீழ் பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும், பொதுப்பணித்துறையினரும் அங்கு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் படிக்கும் 170 மாணவர்கள் ஆழியாறு பகுதிக்கு சுற்றுலா வந்து இரவு 8 மணி அளவில் தடுப்பணையில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது 12-ஆம் வகுப்பு படிக்கும் லோகசுதன்(17) என்பவர் மணலுடன் கூடிய ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் மாணவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு லோகசுதனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.