ஐரோப்பாவில் நீண்ட நாட்களாகத் திட்டமிட்ட தேனிலவு பயணத்திற்கு சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா வாழ் தம்பதி நிகிதாவும் கரணும், சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சீன நபரால் தாக்கப்பட்டதாகக் கூறி அதிர்ச்சியளித்துள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதலால் நிகிதாவின் தாடை எலும்பு பாதிக்கப்பட்டு, பற்கள் சேதமடைந்து, மன உளைச்சலும் பயமும் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
சுவிட்சர்லாந்தின் சீஹோட்டல் ஷ்வெர்ட் என்ற ஹோட்டலில் ஜூன் 19 அன்று தங்கியபோது, மின்விசிறி இல்லாததால் ஏற்பட்ட பிரச்சினையே இந்த மோதலுக்கு காரணமாக அமைந்ததாக நிகிதா தெரிவித்தார். ஹோட்டல் ஊழியர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டதாகவும், “முட்டாள்கள்” என்று அவமதித்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மறுநாள் காலை, கரணும் நிகிதாவும் பழங்கள் எடுக்க சென்றபோது, முந்தைய இரவு மோதலில் ஈடுபட்ட அதே நபர் கத்தியபடி நிகிதாவை நோக்கி வந்ததாகவும், பின்னர் அவர்கள் புகார் அளிக்க முயன்றபோது, ஒரு முதியவரான ஹோட்டல் ஊழியர் கரணை அச்சுறுத்தும் வகையில் நெருங்கி, நிகிதாவின் கைப்பேசியை பறிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அப்போது, அந்த நபர் பெரிய செராமிக் குவளையை நிகிதாவின் முகத்தில் வீசியதில், ஒரு பல் முற்றிலும் உடைந்து, 11 பற்கள் சேதமடைந்ததுடன், தாடை எலும்பு பாதிப்பு ஏற்பட்டதாக நிகிதா தெரிவித்தார். இதனால், அவர்களின் இத்தாலி பயணம் ரத்து செய்யப்பட்டு, கனடா திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், ஹோட்டல் நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, தம்பதியரே மோசமாக நடந்து கொண்டு, ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் பதிவு செய்த வீடியோ சட்டவிரோதமானது என்றும் கூறி, இது உண்மையை திரித்து கூறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
