இமயமலை அடிவார நாடான நேபாளத்தில், சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்த கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு, கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அனைத்து சமூக வலைத்தளங்களும் கட்டாயமாக அரசு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், 26 சமூக வலைத்தளங்கள் பதிவு செய்யத் தவறியதால், செப்டம்பர் 4-ம் தேதி நள்ளிரவு முதல் பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய தளங்கள் முழுமையாக தடைசெய்யப்பட்டன.

இந்தத் தடை, வலைதள வாசிகள் மற்றும் இளைய தலைமுறையினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. தடைசெய்யப்படாத டிக்டாக் மற்றும் பிற செயலிகள் மூலம் அழைப்புகள் விடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் நேபாள தலைநகர் காட்மாண்டுவை நோக்கி பேரணியாக வந்தனர்.

நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களை முற்றுகையிட்டு, ‘ஜென் சி’ பதாகையுடன் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை வன்முறையாக மாறியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்த, 19 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், நேபாள அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு, சமூக வலைத்தள தடை மீதான உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது.