பீகார் மாநிலம் ஷியோகர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் கோட்வாலி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்த நிலையில், 12 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி, நடந்த சம்பவம் குறித்து இம்மாதம் தனது தந்தையிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உத்தரபிரதேச போலீசார், குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் சொந்த ஊரான பீகார் மாநிலம் ஷியோகர் மாவட்டத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு அவரது வீட்டில் இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கூலித்தொழிலாளி பின்னர் உத்தரபிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.