கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் புன்னசெரி பகுதியைச் சேர்ந்த அனு (38) என்பவர், தனது 5 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுவுக்கு திருமணமாகி, ஹர்ஷன் என்ற 5 வயது மகன் உள்ளார். ஹர்ஷன், கக்கூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி வகுப்பு படித்து வந்தார்.

அனு, கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக அனு மனநல ரீதியில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதற்காக அவர் மனநல சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இன்று காலை அனு தனது மகன் ஹர்ஷனை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்த அனு, தனது மகனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அனுவின் வீட்டிற்கு சென்று, வீட்டில் உள்ள அறையில் மயங்கிய நிலையில் கிடந்த சிறுவன் ஹர்ஷனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதையடுத்து, மகனை கொலை செய்த அனுவை போலீசார் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.