நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டவராக அறியப்பட்டவர் ஹாஜி மஸ்தான் மிர்சா. தமிழகத்தைச் சேர்ந்த அவர், பின்னர் மும்பைக்கு சென்று ரியல் எஸ்டேட் தொழிலிலும், கடல்சார் கடத்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். தொழிலதிபராக அறியப்பட்ட ஹாஜி மஸ்தான், நிழலுலக தாதாக்கள் மட்டுமன்றி பாலிவுட் நடிகர்கள் உள்ளிட்ட பலருடனும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹாஜி மஸ்தானின் மகள் ஹசீன் மஸ்தான் மிர்சா, தன் வாழ்க்கையில் ஏற்பட்ட கொடுமைகள் குறித்து பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தந்தை மரணம் அடைந்த நிலையில், சிறு வயதிலேயே தனது சம்மதமின்றி மாமா மகனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த நபருக்கு ஏற்கனவே 8 திருமணங்கள் நடைபெற்றிருந்ததாகவும் கூறினார்.

திருமணத்திற்கு பின் தன்னை தவறாக பயன்படுத்தியதுடன், சொத்துகளையும் பறித்து கொண்டதாகவும், தொடர்ந்து நடந்த உடல் மற்றும் மன உளைச்சலால் 3 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் ஹசீன் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு எதிராக பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்றன. என் சொத்துகளை பறித்து கொண்டு பல வழிகளில் தீங்கிழைத்தனர். மேலும், என் மாமா மகன் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து மரணமடையுமாறு விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பாக, போலீசாரே ‘அப்போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?’ என்று என்னிடம் கேள்வி எழுப்பினர். அப்போது நான் ஒரு குழந்தை” என வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், “வளர்ந்து பெரியவளாகிய பிறகும் ஒருவரும் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை. வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டபோது கூட யாரும் உதவ முன்வரவில்லை” என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் நீதியளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த வாரம், தனது வாழ்க்கை போராட்டம் குறித்து நீதி கோரி, இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பிரதமர் மோடி கொண்டு வந்த முத்தலாக் சட்டத்தை பாராட்டிய ஹசீன் மஸ்தான், பெண்களுக்கு எதிரான இத்தகைய வழக்குகளில் உடனடி நீதியை வழங்கக் கடுமையான சட்டங்கள் அவசியம் என வலியுறுத்தினார். மேலும், தந்தை மரணம் அடைந்தது கூட தெரியாமல், தன்னை 2 ஆண்டுகளாக தனிமைப்படுத்தி வைத்திருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.