பிரிட்டன் நாட்டில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய மிகக் கொடூரமான ‘பாலியல் கும்பல்’ குறித்த விவாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோ, பாதிக்கப்பட்ட பெண்களின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலங்களைச் சபையில் வாசித்து, இந்த விவகாரத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். கடந்த சில தசாப்தங்களாக அந்நாட்டின் 85-க்கும் மேற்பட்ட பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொடூர பாலியல் சுரண்டல் குறித்து அரசு நடத்திய விசாரணையில், இதில் தொடர்புடைய குற்றவாளிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் எம்பி ரூபர்ட் லோ வாசித்த பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் பார்ப்போரை நிலைகுலைய வைப்பதாக உள்ளன. 12 மற்றும் 13 வயதே நிரம்பிய சிறுமிகள் கடத்தப்பட்டு, விலங்குகளை அடைக்கும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான ஆண்களால் மிருகத்தனமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மேலும், இதில் கொடுமையின் உச்சமாக, சில காவல்துறை அதிகாரிகளே தங்களைச் சீரழித்ததாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்ற புகார்கள் வந்தபோதும், சமூகத்தில் ‘இனவாதம்’ என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுமோ என்ற பயத்தில், பிரிட்டன் நாட்டின் உள்ளூர் அதிகாரிகளும், காவல்துறையினரும் இந்த விவகாரத்தில் பல ஆண்டுகளாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிலும் ஒருவர் சுமார் 600 முதல் 700 ஆண்களால் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியதாகவும் வேதனை தெரிவித்தார்.
I want the world to hear what we heard. pic.twitter.com/2DtCS0QztE
— Rupert Lowe MP (@RupertLowe10) June 1, 2026
பிரிட்டன் வரலாற்றில் கரும்புள்ளியாக மாறியுள்ள இந்த விவகாரம், கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பேராசிரியர் அலெக்சிஸ் ஜே அறிக்கையின் மூலம் முதன்முதலில் உலகிற்குத் தெரிந்தது. அந்த அறிக்கையின்படி, ரோதர்ஹாம் நகரில் மட்டும் 1997 முதல் 2013 வரை 1,400-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மிகக் கொடூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு அமைத்த சிறப்புப் பணிக்குழு, கடந்த ஓராண்டில் மட்டும் இந்த பாலியல் கும்பலைச் சேர்ந்த 550-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், “பாதிக்கப்பட்ட இந்த அப்பாவிப் பெண்களின் குரலுக்கு நாடாளுமன்றம் செவிசாய்த்து, இனியாவது குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான இறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எம்பி ரூபர்ட் லோ நாடாளுமன்றத்தில் அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
