தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று வேலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு சில நாட்கள் இடைவெளி விட்டிருந்த அவர், தற்போது மீண்டும் மக்கள் சந்திப்பைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

புதுச்சேரி, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களைத் தொடர்ந்து வேலூரில் உரையாற்றிய விஜய், ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து ஒரு சிறுகதையைத் தொண்டர்களிடையே பகிர்ந்துகொண்டார். அதன் மூலம் ஆளும் கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் மறைமுகமாகச் சாடினார். விஜய்யின் இந்த அரசியல் விமர்சனம் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

விஜய்யைக் காண்பதற்காக வேலூர் சாலைகளில் அதிகாலை முதலே ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காததால், அனுமதி சீட்டு இல்லாதவர்களும் நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி தனது வாகனத்தைப் பின்தொடர வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்தும், ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் அவரைத் தொடர்ந்தது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

விஜய்யின் அரசியல் நகர்வுகள் ஒருபுறம் ஆதரவைப் பெற்றாலும், மறுபுறம் பிரபலங்களின் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது

அதாவது பிக் பாஸ் பிரபலம் ஜூலி விஜய்யின் ஜல்லிக்கட்டு குறித்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இளம் ரசிகர்கள் இந்தப் பேச்சை தவறாகப் புரிந்துகொண்டு ஆபத்தான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஒரு பொதுத் தலைவர் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் 50 தாக இருந்த உயிரிழப்பை 500 ஆக மாற்றி விடாதீர்கள் என்றும் சாடினார்.

இதேபோன்று நடிகை ஓவியா முன்னதாக கரூரில் நடந்த நெரிசலுக்கு விஜய்யை விமர்சித்திருந்த ஓவியா, தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவுகள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

“ஒரு முட்டாள் என்பது ஒரு முட்டாள்; ஆயிரக்கணக்கான முட்டாள்கள் சேர்ந்தால் அது ஒரு அரசியல் கட்சி” எனும் பிரான்ஸ் காஃப்காவின் மேற்கோளை அவர் பகிர்ந்துள்ளார். அதோடு 10,000 முட்டாள்கள் சேர்ந்தால் அது ஒரு அரசியல் கட்சி என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும், “சிலர் பிறப்பிலேயே மகத்தானவர்கள், சிலர் முயற்சியால் உயர்கிறார்கள், இன்னும் சிலர் பி.ஆர் (PR) மூலம் உருவாக்கப்படுகிறார்கள்” என அவர் பதிவிட்டுள்ளது விஜய்யை மறைமுகமாகத் தாக்குவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் நேரத்தில் திரைப்பிரபலங்கள் வெளியிடும் இத்தகைய கருத்துகள் வாக்காளர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இணையதளங்களில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.