குரு தத்துவத்தை இழிவுபடுத்துபவர்களையும், தற்போதைய சமூக மாற்றங்களையும் கடுமையாகச் சாடி மதுரை உயர்நீதிமன்ற கிளை  நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசியுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தியான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியதாவது,

“ஒவ்வொருவரும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்திருக்கலாம். ஆனால், ‘குரு’ என்கிற தத்துவம் அனைவருக்கும் பொதுவானது. குரு என்பவர் கடவுளின் நிகழ்கால உருவம். இறைவனின் பாதங்களைப் பற்றுவதை விட, குருநாதரின் கால்களைப் பற்றிக்கொள்வது எளிது. நாம் கைவிடப்பட்ட சூழலில் இருக்கும்போது குருவின் அருள் மட்டுமே நம்மைக் காக்கும்.

தமிழகத்தில் உள்ள சில பகுத்தறிவாளர்கள், குருவை மதிப்பவர்களை முட்டாள்கள், அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள் என விமர்சிக்கிறார்கள். நான் சொல்கிறேன், அப்படிச் சொல்கிறவர்கள்தான் உண்மையான முட்டாள்கள் மற்றும் காட்டுமிராண்டிகள்,” என அதிரடியாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய சமூக ஒழுக்கம் சார்ந்து வெளியான ஒரு கட்டுரை குறித்து தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார். அதாவது”சமீபத்தில் ஒரு முன்னணி ஆங்கில நாளிதழில் ‘Ethical non-monogamous relationship’ (ஒப்பந்த அடிப்படையிலான பலதார உறவு) குறித்துக் கட்டுரை வெளியாகியிருந்தது. கணவன்-மனைவி சம்மதத்துடன் வேறு நபர்களுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்ற கலாச்சாரம் பரவி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது நம் சமுதாயம் எவ்வளவு பெரிய சீர்கேட்டை நோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுகிறது.”

“பாரத சமுதாயத்தின் அடிப்படை குடும்பம் தான். அந்த குடும்ப அமைப்பையும், ஒழுக்கத்தையும் காப்பாற்ற வேண்டுமானால், நாம் தியான முறைகளோடும், நமது தேச கலாச்சாரத்தோடும் ஒட்டிய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இஸ்லாமியப் பெரியவர் ஒருவருடன் தான் உரையாடியதை நினைவுகூர்ந்த நீதிபதி, “மனம் ஒருமுகப்படுவதில்லை என்பது எல்லா மதத்தினருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை. தியான நுட்பங்களை ஒரு இஸ்லாமியர் உள்வாங்கிக்கொண்டால், அவர் இன்னும் சிறப்பான முறையில் நமாஸ் செய்ய முடியும். தியானம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல,” என்றார்.

மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஏற்கனவே விவாதத்திற்கு உள்ளான நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் இந்த அண்மைக்காலப் பேச்சு, அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் மீண்டும் அலைகளை உருவாக்கியுள்ளது.