தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு திமுகவை அச்சப்பட வைக்கும் தலைவராக உருவெடுத்துள்ளார் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
“திமுகவினர் தாங்கள் கொள்ளையடித்த பணத்தைக் கொடுத்து, வரவிருக்கும் தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கத் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால், தவெக தலைவர் விஜய் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. தனது உச்சகட்ட சினிமா தொழிலையே விட்டுவிட்டு மக்கள் சேவைக்காக வந்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் கார் இல்லை என்று குறிப்பிடுகிறார். ஆனால், நிஜத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான காரில் பயணிக்கிறார். எவ்வித அழுத்தத்திற்கும் பணியமாட்டேன் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.
“வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கண்கலங்கியதற்குக் காரணம் கரூர் சம்பவத்தால் ஏற்பட்ட வலிதான். சென்னையில் இருந்து வேலூர் வரும் வரை சாலையின் இருபுறமும் சுமார் 2 லட்சம் பேர் திரண்டிருந்தனர். அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்திலும், மக்களின் அன்பிலும் அவர் நெகிழ்ந்து போனார்.
கரூரில் தவெக நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்காததே உயிரிழப்புகளுக்குக் காரணமானது. தவெகவின் வளர்ச்சியை முடக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை (SOP) விதித்து வருகிறது.
“கட்சிக் கூட்டங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது காவல்துறையின் கடமை. ஆனால், போலீசார் கடமைக்கு வந்துவிட்டுச் செல்கின்றனர். தவெக மீது ஏதேனும் ஒரு பழிச்சொல்லை உருவாக்க திமுக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. அதனால்தான், ஒவ்வொரு 10 நாட்களுக்கும் உரிய அனுமதி பெற்று விஜய் நிதானமாகச் செயல்பட்டு வருகிறார்.
சினிமாவில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்த விஜய், இப்போது அரசியலுக்காக 24 மணி நேரமும் உழைக்கத் தயாராக உள்ளார். அவர் மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன,” என்று ஆதவ் அர்ஜுனாபேசினார்.
