உத்தரப் பிரதேசம் கோரக்பூரில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி வழக்கில், ஒரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 28-ஆம் தேதி இரவு மாவட்ட மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை, வழியில் வழிமறித்து அழைத்துச் சென்ற காவலர் அபிஷேக் யாதவ் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகத் தாக்கியதுடன், அவரது கைகளைக் கட்டி ஆற்றில் வீசிய கொலையாளி, பின்னர் காவல் துறைக்குத் திரும்பி தனது சீருடையில் இருந்த ரத்தக் கரைகளை அகற்றி ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளான்.

காணாமல் போன சிறுமியைத் தேடிய குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், மருத்துவமனை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். வாகன எண்ணின் அடிப்படையில் காவலர் அபிஷேக் யாதவ் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது காட்டிய இடத்திலிருந்து 36 மணி நேரத்திற்குப் பிறகு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் எலும்புகள் முறிக்கப்பட்டு, உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, தன் மகளுக்கு இறுதிச் சடங்குகள் செய்துகொண்ட அதே நாளில், அந்தச் சிறுமியின் தாயார் ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். தன் தம்பிக்கு ராக்கி கட்டி விட வேண்டும் என்ற மறைந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் தருணத்தில், இந்த சோகம் நிகழ்ந்துள்ளது குடும்பத்தினரை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காவலரை மருத்துவமனை பணியாளர்களே தாக்கியதுடன், பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காவலர் அபிஷேக் யாதவ் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு கிரிமினல் வழக்கில் தொடர்புடைய இவர் மீது, போக்ஸோ சட்டம் மற்றும் பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்  கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கௌஸ்துப் தெரிவித்துள்ளார். குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என சிறுமியின் குடும்பத்தினரும் பொதுமக்களும் தீவிர கோரிக்கை விடுத்து வருகின்றனர்.