தற்போது பெரும்பாலானோர் அசைவ உணவுகளுக்குப் பெரும் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். அதிலும் சிக்கன் பிரியாணி என்றாலே மக்கள் ஆர்வம் அதிகம்.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், சிவகண்ணன் ரெஸ்டாரண்ட் என்ற புதிய உணவக கிளை திறப்பு விழாவை முன்னிட்டு, 10 பைசா நாணயத்துடன் வரும் முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒன்றை இலவசமாகவும், 2 மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் 65 இலவசமாகவும் வழங்கப்படும் என பிரம்மாண்ட சலுகை அறிவிக்கப்பட்டது.
இந்த சலுகையை பயன்படுத்த பலர் ஆர்வத்துடன் வந்ததால் உணவகத்தின் அருகே மக்கள் கூட்டம் அலைமோதியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த நிலையில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் மற்றும் துணை மேயர் விக்னேஷ்பிரியா நிகழ்வில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கிளையை திறந்து வைத்தனர்.
ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், மக்கள் தாங்கள் கொண்டுவந்த 10 பைசா நாணயத்துக்கு பிரியாணி கிடைக்குமா என எண்ணி, வரிசையை மீறி அத்துமீறி நுழைய முயன்றனர். இதனால் அலங்கார பலூன்கள் உடைந்து, கண்ணாடிக் கதவு உடைய வாயிலாக கூட்டம் உள்ளே நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து நிலைமைக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தினர். மக்கள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்ததால், பிரியாணி விநியோக திட்டத்தை பாதியிலேயே நிறுத்துமாறு உணவக நிர்வாகத்திடம் போலீசார் வலியுறுத்தினர்.
இந்நிலையில், பலர் மண்டையடித்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும், வேலைக்கு செல்லாமல் பிரியாணி சலுகையை நம்பி வந்த பட்டாசு தொழிலாளர்கள் சலுகை நிறைவேறாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதன் காரணமாக, சில மணி நேரம் சிவகாசி பகுதியில் பரபரப்பு நிலவியது.
