ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி காளியண்ண வீதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கவுந்தப்பாடியில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கமுத்து தனக்கு தெரிந்த 10 பேரை சந்தித்து எனக்கு குடும்ப கஷ்டம் இருக்கிறது. என்னிடம் இருக்கும் நகைகளை எனது பெயரில் வங்கியில் அடகு வைக்க முடியாது. எனவே எனக்காக உங்கள் கணக்கில் நகைகளை அடகு வைத்து பணத்தை வாங்கி தாருங்கள், நான் உங்கள் கணக்கில் பணத்தை செலுத்தி நகைகளை மீட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய 10 பேரும் நகைகளை அடகு வைத்து சுமார் 4 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்தனர்.

இதனையடுத்து வங்கியில் உள்ள நகைகளை தணிக்கை செய்ய உயர் அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்றபோது 10 பேரின் கணக்கில் இருக்கும் நகைகள் போலியானது என்பது தெரியவந்தது. அவர்களை அழைத்து விசாரித்த போது அங்கமுத்து தான் நகைகளை கொடுத்து வங்கியில் அடகு வைத்து பணம் வாங்கி கொடுக்குமாறு கூறினார் என தெரிவித்தனர். இதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட அங்கு முத்து உடல் நலம் சரியில்லை என கூறி விடுப்பு எடுத்து சென்று விட்டார். அதன் பிறகு அவர் வேலைக்கு வரவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கவுந்தப்பாடி போலீசார் போலியான நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட அங்கமுத்துவை நேற்று கைது செய்தனர்.