ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில், டெல்லி அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டம் மற்றும் டெல்லி வீரர்களின் பீல்டிங் தவறுகளே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா தொடக்கம் முதலே அதிரடியைக் காட்டினார். வெறும் 10 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளை விளாசிய அவர், 135 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 242 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

இந்த அதிரடி மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 9-வது சதத்தைப் பதிவு செய்த அபிஷேக் சர்மா, அதிக டி20 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையைச் சமன் செய்தார். மேலும், கிறிஸ் கெயிலுக்குப் பிறகு ஒரே இன்னிங்ஸில் இரண்டு முறை 10 அல்லது அதற்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்த ஆட்டத்தில் டெல்லி அணி தோல்வியடைய அந்த அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் மற்றும் நிதிஷ் ராணா செய்த இரு தவறுகள் முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன. அதாவது அபிஷேக் சர்மா 49 ரன்களில் இருந்தபோது, அவரை ரன்-அவுட் செய்யும் பொன்னான வாய்ப்பு கே.எல்.ராகுலுக்குக் கிடைத்தது. பந்தை சரியாகப் பிடித்து ஸ்டம்பில் அடித்திருந்தால் அபிஷேக் வெளியேறியிருப்பார். ஆனால், ராகுல் பந்தைக் கையில் பிடிக்கத் தவறியதால் அபிஷேக்  பிழைத்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Fanziz (@fanzizapp)

அபிஷேக் சர்மா 87 ரன்களில் இருந்தபோது ஒரு பந்தை காற்றில் அடித்தார். அதனைப் பிடிக்க நிதிஷ் ராணா ஓடி வந்தும், மிக எளிதான அந்த கேட்ச்சை நழுவவிட்டார். மீண்டும் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய அபிஷேக், அணியின் ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்தினார். இந்தத் தொடர் தவறுகளால் டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் களத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 243 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியால் 195 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

மேலும் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணியின் மோசமான பீல்டிங் அந்த அணியின் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.