சிஎஸ்கே ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு இக்கட்டான சூழ்நிலை தற்போது ஐபிஎல் தொடரில் உருவாகியுள்ளது. அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான ஆயுஷ் மாத்ரே, காயம் காரணமாக எஞ்சியிருக்கும் போட்டிகளில் இருந்து விலகியிருப்பது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன் எடுக்க முயன்றபோது ஏற்பட்ட கால் காயம், அவரை தொடரை விட்டே வெளியேற்றியுள்ளது. சிறப்பாக விளையாடி வந்த ஒரே ஒரு பேட்ஸ்மேனும் களத்தை விட்டுச் சென்றது ரசிகர்களைக் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பேட்டிங் ஒருபுறம் இருக்க, பந்துவீச்சிலும் சிஎஸ்கே சிக்கலில் தவிக்கிறது. திறம்பட செயல்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவும் காயம் காரணமாக ஓய்வில் அமர்த்தப்பட்டுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, அணியின் ‘தூண்’ என்று அழைக்கப்படும் எம்.எஸ். தோனி களத்தில் இல்லாதது மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இல்லாத போட்டிகளில் சிஎஸ்கே அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வருவது, ‘தோனி இல்லாத சிஎஸ்கே-வை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை’ என வீரர்களையும் ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
