ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 135 ரன்கள் குவித்து சாதனை படைத்த சன்ரைசர்ஸ் வீரர் அபிஷேக் சர்மாவை, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி விமர்சித்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. இதில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் சதம் விளாசி, ஒட்டுமொத்தமாக 135 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் ஹைதராபாத் அணி 242 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இலக்கைத் துரத்திய டெல்லி அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அபிஷேக் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டத்தைப் பாராட்டிய அதே வேளையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி ஒரு குறையைக் கண்டுபிடித்துள்ளார். அவர் கூறுகையில், ஐபிஎல் தொடரில் இளம் மற்றும் அனுபவமற்ற பந்துவீச்சாளர்களின் பந்தில் சிக்ஸர் அடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நீங்கள் ஒரு சிறந்த வீரராக இருந்தால், எனது மருமகன் ஷாஹீன் அஃப்ரிடியின் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்குமாறு சவால் விடுகிறேன். ஷாஹீன் வீசும் முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா ‘டக் அவுட்’ ஆவது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் மெதுவாகப் பந்துவீசியதாலேயே அபிஷேக் இவ்வளவு ரன்களைக் குவித்தார் என்றும் அஃப்ரிடி கிண்டல் செய்துள்ளார். அஃப்ரிடியின் இந்தக் கருத்துக்கு அபிஷேக் சர்மாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆசிய கோப்பை தொடரின் போது ஷாஹீன் அஃப்ரிடியின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் சிதறடித்ததை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். “திறமையால் உயர்ந்த ஒரு இளம் வீரரை ஊக்கப்படுத்துவதற்குப் பதில், இப்படித் தரம் தாழ்ந்து விமர்சிப்பது அஃப்ரிடிக்கு அழகல்ல” என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த மோதல் போக்கு இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே மீண்டும் ஒரு வார்த்தைப் போரைத் தூண்டியுள்ளது.