டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 135 ரன்கள் குவித்து சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் குறித்து, பிரபல விளையாட்டு விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான விக்ராந்த் குப்தா தெரிவித்துள்ள கருத்துக்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில், டெல்லி அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 242 ரன்கள் குவித்தது. இதில் அபிஷேக் சர்மா 10 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 45 பந்துகளில் அவர் சதம் கடந்தார்.
அபிஷேக் சர்மாவின் இந்தச் சதத்தைப் பாராட்டுவதை விட, அவரது பேட்டிங் வேகம் குறித்து விக்ராந்த் குப்தா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அபிஷேக் சர்மா சதம் அடித்தது சிறப்பாக இருக்கலாம். ஆனால், இந்த ஆட்டத்தில் அவர் ஒரு டெஸ்ட் வீரரைப் போல நிதானமாக விளையாடியுள்ளார். இது அவரது இயல்பான அதிரடி பாணி அல்ல. ஒருவேளை அவர் தனது வழக்கமான வேகத்தில் விளையாடி இருந்தால், ஹைதராபாத் அணி 260 ரன்களுக்கும் மேல் குவித்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
What a brilliant knock by Abhishek Sharma – a bit ‘slow’ by his standards but with almost 6 overs to go Sunrisers Hyderabad should target 260 and shut the doors on Delhi#SRHvsDC
— Vikrant Gupta (@vikrantgupta73) April 21, 2026
இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் 198-ஆக இருந்தது. அவரது முந்தைய ஆட்டங்களோடு ஒப்பிடுகையில் இது குறைவு என்றும், சதம் அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் நிதானத்தைக் கடைப்பிடித்தார் என்றும் விக்ராந்த் குப்தா குற்றம் சாட்டியுள்ளார்.
10 சிக்ஸர்கள் அடித்து, 135 ரன்கள் குவித்த ஒரு வீரரின் ஆட்டத்தை ‘டெஸ்ட் பேட்டிங்’ என விமர்சிப்பது நியாயமற்றது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த விமர்சனங்களால் சமூக வலைதளங்களில் விக்ராந்த் குப்தாவிற்கும் ரசிகர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவி வருகிறது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
