டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 135 ரன்கள் குவித்து சாதனை படைத்த சன்ரைசர்ஸ் வீரர் அபிஷேக் சர்மா, பாகிஸ்தான் முன்னாள் வீரர் வஸீம் அக்ரமுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில், டெல்லி அணிக்கு எதிராக அபிஷேக் சர்மா 47 பந்துகளில் சதம் விளாசி, ஒட்டுமொத்தமாக 135 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஹைதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவரது இந்த அபாரமான இன்னிங்ஸைத் தொடர்ந்து, அவர் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஸீம் அக்ரமுடன் டிரெஸ்ஸிங் ரூமில் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலானது.
அந்த வீடியோவில், வஸீம் அக்ரம் அபிஷேக் சர்மாவின் தோளில் கை போட்டு, “மகனே, நீ நன்றாக விளையாடுகிறாய், இதையே தொடரு, எனது ஆலோசனைகளைப் பின்பற்று” என்று கூறுவதும், அதற்கு அபிஷேக் சர்மா “நிச்சயம் பின்பற்றுவேன்” என்று பதிலளிப்பதும் போலக் காட்சிகள் இருந்தன. இதைப் பார்த்த சில நெட்டிசன்கள், “இந்திய வீரருக்குப் பாகிஸ்தான் வீரருடன் என்ன வேலை?” என்றும், “டிரெஸ்ஸிங் ரூமிற்குள் அவரை எப்படி அனுமதித்தீர்கள்?” என்றும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
Abhishek Sharma took Wasim Akbar advice seriously. Head down, move forward. #SRHvsDC pic.twitter.com/I2B8DVCUkA
— Shipra (@mehtasaab19) April 21, 2026
சர்ச்சை முற்றிய நிலையில், அபிஷேக் சர்மாவின் ஆதரவாளர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் இதற்குத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளனர். தற்போது வைரலாகும் வீடியோ மிகவும் பழமையானது என்றும், தற்போதைய ஐபிஎல் தொடருக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். அபிஷேக் சர்மா சதம் அடித்து புகழின் உச்சிக்குச் சென்றிருப்பதைக் கண்டு பொறுக்காத சிலர், வேண்டுமென்றே பழைய வீடியோவை இப்போது பரப்பி அவருக்கு எதிராகப் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் அபிஷேக் சர்மா ஒரு சிறந்த தேசபக்தர் என்றும், ஒரு வீரராக மற்ற நாட்டு ஜாம்பவான்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
