பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 21) காலை தொடங்கியதைத் தொடர்ந்து, மேல் சபையில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விதி 267-ன் கீழ் அவதானிக்க நோட்டீஸ் அளித்திருந்தார்.
மேல் சபையில் உரையாற்றிய அவர், “பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இதுவரை எந்த தீவிரவாதியும் பிடிக்கப்படவில்லை. நாட்டின் உளவுத்துறை தோல்வியடைந்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தாமசினி அறிக்கையிலேயே தெரிவித்துள்ளார். ஆனால் அரசு இதுவரை சரியான தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக கூறவில்லை,” என்றார்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா–பாகிஸ்தான் இடையே நடந்த போர் நிறுத்தம் குறித்து தன் தலையீடு காரணமாக ஏற்பட்டதாக 24 முறை தெரிவித்திருப்பது, இந்தியாவின் வெளிநாட்டு கௌரவத்திற்கு கேள்விக்குறி எழுப்பும் வகையில் இருப்பதாக கார்கே குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக பதிலளித்த பாஜக மூத்த தலைவர் மற்றும் மத்திய மந்திரி ஜே.பி. நட்டா, “இந்த விவகாரத்தில் விரிவான விவாதத்துக்கு அரசு தயாராக உள்ளது. எந்தவொரு விவாதத்திலிருந்தும் பாஜக அரசு ஓடி போவதில்லை ” என தெளிவாக தெரிவித்தார்.
இதற்கிடையில், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையின் செயல்பாடு காலை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மறுபடியும் அவை கூடியதும், அதே விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ் உறுப்பினர்கள், தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தின் முதல் நாளே பரபரப்பான சூழ்நிலையில் முடிந்தது.
