திமுக அரசு தேர்தல் தோல்வி பயத்தில் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகவும், ஆனால் அவை மக்களிடம் ஒருபோதும் எடுபடாது என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், கோடைகால சிறப்புத் தொகையாக 5,000 ரூபாய் இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள டிடிவி தினகரன், “₹5,000 அல்ல, ₹50,000 கொடுத்தாலும் இந்தத் தேர்தலில் திமுக தோற்பது உறுதி” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மகளிருக்கு 5 ஆயிரம் மட்டுமில்லை 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி – தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம்…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 13, 2026
தனது சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “தேர்தல் தோல்வி பயத்தின் பின்னணியில்தான் இந்த ₹2,000 உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மகளிரின் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே அனைவருக்கும் முறையாக உரிமைத் தொகையை வழங்கியிருக்க வேண்டும். அப்போது பல நிபந்தனைகளை விதித்து ஏமாற்றிய திமுக, இப்போது தேர்தல் வருவதால் அவசர கதியில் வாக்குறுதி அளிப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்குப் பயந்தே இப்போதே பணத்தை வரவு வைத்துள்ளனர். பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று துடிக்கும் திமுக-வுக்கு, இந்த முறை மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று அவர் சாடியுள்ளார்.
