சேலம், சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

​இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் இன்று நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் சூரஜ் என்ற சகோதரர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். மிகவும் இளம் வயதில், ஒரு பொதுநிகழ்வில் பங்கேற்க வந்த ஒருவரின் உயிர் இவ்வாறு பறிபோனது சொல்லொணாத் துயரத்தையும், மிகுந்த மனவேதனையையும் ஏற்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் அரசியல் நகர்வுகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இந்தக் கூட்டத்தில் நடந்த உயிரிழப்பு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.