திமுக அரசு மகளிருக்கு வழங்கி வரும் சிறப்புத் தொகுப்பு மற்றும் உரிமைத் தொகை குறித்து அமைச்சர் ரகுபதி எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். “முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சொன்னதைச் செய்பவர் மட்டுமல்ல, சொல்லாததையும் செய்பவர்” என்று புகழாரம் சூட்டிய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனங்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த மாதம் பொங்கல் பரிசுத் தொகையோடு சேர்த்து மகளிருக்கு ரூ.4,000 கிடைத்தது. இந்த மாதம் கோடைகால சிறப்புத் தொகுப்போடு சேர்த்து ரூ.5,000 அவர்களின் வங்கிக் கணக்கில் கிடைத்துள்ளது. இதைப் பார்த்தாவது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருக்க வேண்டும். பொய் புகார்களைக் கூறி வந்த அவரது வாயை முதலமைச்சர் இந்த அதிரடி அறிவிப்புகளின் மூலம் தைத்துவிட்டார்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். அரசின் இந்த அதிரடிப் பணப் பரிமாற்றம் தேர்தல் களத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம் தவிடுபொடியாகிவிட்டதாகவும் அவர் தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்தார்.
