மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ஈரானில் தங்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து எழுந்த கவலைகளுக்கு ஈரான் முக்கிய விளக்கமளித்துள்ளது. ஈரானில் உள்ள இந்திய நண்பர்கள் அனைவரும் பாதுகாப்பான கைகளில் இருப்பதாகவும், அவர்களைப் பற்றி இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்றும் ஈரான் சிறப்புச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.
இதுவரை இந்தப் போரில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு இந்தியாவிற்கு ஒரு சிறிய நிம்மதியைத் தந்துள்ளது. அதேசமயம், அணு ஆயுதக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட விவகாரத்தால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதைத் திறக்கக் கோரி அமெரிக்கா ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. பேச்சுவார்த்தைக்கு இணங்காவிட்டால் ஈரானை கற்காலத்திற்குத் தள்ளிவிடுவோம் என அமெரிக்கா மிரட்டிய போதிலும், ஈரான் தனது நிலையில் உறுதியாக உள்ளது.
போர்க்களத்தில் சிக்கியுள்ள தனது குடிமக்களை மீட்க ரஷ்யா போன்ற நாடுகள் தீவிரமாக முயன்று வரும் வேளையில், இந்திய அரசு தனது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தூதரக ரீதியாகத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஈரான் அளித்துள்ள உறுதிமொழி இந்தியாவிற்கு ஆதரவான ஒரு சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.
