ஹாங்காங் தாய் போவில் அமைந்துள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் தீ விபத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. பல உயரமான அடுக்குமாடிக் கட்டிடங்களைச் சூழ்ந்த தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதால் மீட்புப் பணிகள் கடும் சிரமத்துடன் நடைபெற்று வருகின்றன.

உயர்தளங்களில் சிக்கியுள்ள குடியிருப்பாளர்களை அடைய தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ இன்னும் அணைக்கப்படாத நிலையில் புகை மூட்டம் பரவியிருப்பதால் நடவடிக்கைகள் மேலும் சிக்கலாகியுள்ளது.

 

இந்த சம்பவத்தையடுத்து சமூக ஊடகங்களில் பலர் தீப்பிடித்த கட்டிடங்களின் காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர். இதில், சில பயனர்கள் சிங்கப்பூரின் ‘மெரினா கார்டன்ஸ்’ குடியிருப்பு வளாகத்தில் இந்த ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த பழைய காணொளியை ஹாங்காங்கில் நடைபெற்ற விபத்தே என தவறாகப் பரப்பி வருகின்றனர்.

அக்டோபர் 28-ஆம் தேதி சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலின் 55வது மாடியில் தீ பரவியது. அதிர்ஷ்டவசமாக, அப்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அருகில் நடைபெற்ற வெல்டிங் பணிகளிலிருந்து பறந்த தீப்பொறிகளால் அந்தச் சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்திருந்தது.

ஹாங்காங் தீ விபத்துக்கான காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருவதால் உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேல் தளங்களில் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களுக்கான கவலை சமூக வலைதளங்களிலும் வெளிப்படுகின்றது. உயிர் பிழைத்திருப்போருக்காக மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.