சர்வதேச வர்த்தகத்தின் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஈரானின் தன்னிச்சையான போக்கினால், இந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறிப்பாக, இந்தப் பாதையைப் பயன்படுத்தும் சர்வதேசக் கப்பல்களிடமிருந்து ஈரான் பெருந்தொகையைக் கட்டணமாக வசூலிக்கத் தொடங்கியுள்ளது. ஈரானின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவு, உலக நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், கடல்சார் பாதுகாப்பிற்குப் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.
மேலும் உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. இத்தகையச் சூழலில், ஈரான் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஈரான் மேற்கொள்ளும் இந்த கெடுபிடிகள், உண்மையில் மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு தந்திரமாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் பதற்றமான சூழல் தொடர்ந்தால், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட வாய்ப்புள்ளது.
