சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையிலான நீண்டகால மோதலில், பாகிஸ்தான் தற்போது ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் 2025-இல் சவூதி அரேபியாவுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட “மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின்” படி, சவூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது பாகிஸ்தான் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.

தற்போது ஈரானுக்கும் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டணிக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை சவூதி அரேபியாவிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கத் தளங்களை நோக்கித் திருப்பியுள்ளது.

மேலும் பாகிஸ்தான் தனது நட்பு நாடான சவூதிக்கு ஆதரவாகப் போரில் இறங்கினால், ஈரானுடனான தனது 900 கிலோமீட்டர் எல்லையில் நேரடிப் போர் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், ஈரான் தற்போது பாகிஸ்தானின் வியூகங்களை முடக்கும் வகையில் காய்நகர்த்தி வருகிறது.

இந்நிலையில் ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கை பாகிஸ்தானை ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும், உள்நாட்டில் நிலவும் பொருளாதாரச் சரிவையும் சந்தித்து வரும் பாகிஸ்தான், இப்போது ஈரானுடன் மோதினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறியும்.

இதனால் ஈரானின் மறைமுக எச்சரிக்கைகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றம் காரணமாக, சவூதி அரேபியாவிற்கு ராணுவ உதவி வழங்க பாகிஸ்தான் தயக்கம் காட்டி வருகிறது. சவூதிக்கு ஆதரவாகப் போரில் குதிப்பதா அல்லது அண்டை நாடான ஈரானுடன் சுமூக உறவைப் பேணுவதா என்ற இருதலைக் கொள்ளி எறும்பாக பாகிஸ்தான் தவித்து வருவதையே தற்போதைய சூழல் காட்டுகிறது.