இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் குறித்து உலக நாடுகளுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

கடந்த 48 மணி நேரத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள், வெறும் ராணுவ நிலைகளை மட்டும் குறிவைக்காமல், குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் ஜெருசலேமில் உள்ள மிகப்புனிதமான மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் விழுந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச சட்டங்களால் தடை செய்யப்பட்ட ‘கிளஸ்டர்’ குண்டுகளை ஈரான் பயன்படுத்துவதாகவும், இது ஒட்டுமொத்த உலகிற்கும் விடுக்கப்பட்ட சவால் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஏவுகணைகள் இப்போது ஐரோப்பா வரை பாயும் வல்லமை கொண்டவை என்பதை சுட்டிக்காட்டிய நெதன்யாகு, ஈரான் தற்போது ‘ஆயில் பிளாக்மெயில்’ (Oil Blackmail) செய்வதன் மூலம் உலக நாடுகளை மிரட்டி வருவதாகவும், இனிமேலும் பொறுமை காக்காமல் உலக நாடுகள் ஒன்றிணைந்து ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தற்போது தற்காப்புக்காக மட்டும் போராடவில்லை, ஒட்டுமொத்த உலகின் அமைதிக்காகவே போராடி வருவதாக அவர் தனது உரையில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.