மத்திய கிழக்கில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஏப்ரல் 2) காலை இந்திய நேரப்படி 6:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
ஈரானுடனான போரில் அமெரிக்க ராணுவம் ஒரு தீர்க்கமான மற்றும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளதாக அறிவித்த டிரம்ப், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) தலைமை முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகவும், அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்குள் ஈரானின் அணுசக்தித் திறனை முடக்கும் வகையில் இறுதிப் போர் நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“ஈரான் இனி ஒரு அச்சுறுத்தல் அல்ல, அனைத்து அதிகாரமும் இப்போது எனது கையில் உள்ளது” என டிரம்ப் ஆவேசமாக முழங்கினார்.
WE ARE ON-TRACK TO COMPLETE ALL OF AMERICA’S MILITARY OBJECTIVES SHORTLY. 🇺🇸 pic.twitter.com/qTx8ragALk
— The White House (@WhiteHouse) April 2, 2026
“>
தனது உரையில் உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி குறித்துப் பேசிய டிரம்ப், “அமெரிக்காவிற்கு இனி ஹார்முஸ் ஜலசந்தி தேவையில்லை” என்று கூறி அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டார்.
அமெரிக்கா தற்போது எரிசக்தி தன்னிறைவு அடைந்துவிட்டதாகவும், ஹார்முஸ் ஜலசந்தியைச் சார்ந்திருக்கும் நாடுகள் தைரியம் இருந்தால் அதைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரட்டும் என்றும் அவர் சாடினார்.
மேலும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் விநியோகத்தை விட வெனிசுலாவின் வளங்கள் வலிமையானவை என்றார். ஈரானில் ஆட்சி மாற்றத்தை உறுதி செய்துள்ள டிரம்ப், அணு ஆயுதங்களை உருவாக்க ஈரானை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
